
தீனியாத் கல்வி நிறுவனம்
நமது இறைமறை இயக்கம் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக தர்பியத்துல் அத்ஃபால் எனும் பெயரில் சிறுவர் சிறுமியருக்கான மக்தப்களை நடத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப இஸ்லாமிய பாடத்திட்டங்களை உருவாக்கியும் தேர்வு செய்தும் பிள்ளைகளுக்கான கல்வி முறை போதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அஹம் அறக்கட்டளை எனும் இஸ்லாமிய கல்வியியல் ஆய்வு நிறுவனத்தின் தீனியாத் என்ற உலகளாவிய இஸ்லாமிய பாடத்திட்டம் தேர்வு செய்யப்பட்டு மக்தப் பாடங்கள் நடைபெற்று வருகிறது.
அஹம் அறக்கட்டளை என்பது நமது நாட்டின் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட, 2004 ஆம் வருடம் துவங்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக்கான ஓர் ஆய்வு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் தற்கால சிறுவர் சிறுமியரின் நிலைகளையும் நேரத்தையும் கவனத்தில் கொண்டு குறைந்த நேரத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளை அவர்களுடைய ‘மன நிலைக்கு ஏற்பவும் வயதிற்கேற்பவும் கற்றுக் கொடுப்பது’ என்ற அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு தீனியாத் என்ற 15 வருடத்திற்கான இந்த பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
இதுவரை உலகின் பல நாடுகளில் சுமார் 18 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. பாடங்கள் எளிதாக விளங்க செய்ய வேண்டும் என்பதற்காக 1 குர்ஆன், 2 ஹதீஸ், 3 கொள்கைகள், சட்டங்கள், 4 இஸ்லாமிய பயிற்சி, 5 மொழி என்ற ஐந்து தலைப்புகளில் இந்த பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் சில துணை தலைப்புகளும் உள்ளன. மேலும் ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் அது பற்றிய விளக்கமும் ஆர்வமூட்டுவதற்காக அதன் சிறப்புகளும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தீனின் மிக முக்கியமான விஷயங்கள், உதாரணமாக தொழுகை. இதை மாணவர்கள் செய்முறை பயிற்சியுடன் கற்று அதை கடைபிடிப்பதற்காக இதுபோன்ற விளக்கங்களில் அதிகமாக முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்தையும் இலகுவாக நடத்துவதற்காக மாதங்களாக, நாட்களாக, மாணவர், ஆசிரியர், பெற்றோர், ஆகியோருக்கு திட்டமிட்டதாக அமைய வேண்டி பிரிக்கப்பட்டுள்ளன. அவை தவிர மாத இறுதியில் ஆய்வு செய்வதற்காக வேண்டி ஒவ்வொரு மாதத்திற்கான கேள்விகளும் தொழுகை பதிவேடும் இணைக்கப்பட்டுள்ளன.
இம்முறைப்படி பயிற்றுவிப்பதனால் இன்ஷா அல்லாஹ் குறைந்த நேரத்தில் அதிக பயன் ஏற்படுகிறது. மேலும் எளிதான முறையில் மார்க்கத்தைக் கற்று அதை தானும் அமல் செய்து பிற மக்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வமும் ஏற்படுகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் நமது இச்சிறிய முயற்சியை ஏற்று நமது இம்மை மறுமையின் வாழ்க்கை சிறக்க அருள்புரிவானாக! ஆமீன்!